காரைநகர் பிரதேசத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காரைநகர் பிரதேசத்தில்தான் போதைப்பொருள் பாவனை அதிகமாகவுள்ளதாக, புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம், நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போதே, பிரதேச செயலக ரீதியாக போதைப்பொருள் பாவனை தொடர்பில், கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் இந்த புள்ளிவிபரங்கள் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அங்கு காரைநகர் பிரதேசத்தில், போதைப் பொருள் கடத்தல்கள் – விற்பனையும் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு அங்கு நிரந்தர பொலிஸ் நிலையம் இல்லாமையே முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவற்றைக் கட்டுப்படுத்த காரைநகரில் தனியான பொலிஸ் நிலையம் ஒன்றை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, ஊர்காவற்றுறை பிரிவுப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு, யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூட்டத்தில் வைத்தே அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.