காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
இந்நிலையில், மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவேண்டாம் எனவும் தொழிலுக்குச் சென்றவர்களைத் திரும்புமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைப் பகுதியில் கடற்போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் தாழமுக்கமாக மாறி இன்று பிற்பகல் திருகோணமலையில் இருந்து தென்கிழக்குத் திசையில் 750 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இந்த மண்டலம் அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் புயலாக மாறக்கூடும்.
இது மேற்குத் திசையில் நகர்ந்து புதன்கிழமை மாலை மட்டக்களப்புக்கும், முல்லைத்தீவிற்கும் இடையில் கிழக்கு கரையோரத்தில் தரை தட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வடக்கு கிழக்கு கடற்பரப்பில் அடிக்கடி மழை பெய்யும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.