கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்ட விவகாரம்: ரஷ்யா மீது அமெரிக்கா பெருளாதார தடை

கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா அத்துமீறி இணைத்துக் கொண்ட விவகாரத்தில், அந்த நாட்டின் தனியார் ரயில்வே நிறுவனமான கிராண்ட் சர்வீஸ் எக்ஸ்பிரஸ் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது. சர்வதேச நாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்புடன் இந்தத் தடை விதிக்கப்படுகிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கிராண்ட் சர்வீஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி உள்ளிட்ட 8 பேர் மீது ஐரோப்பிய யூனியன் அமைப்பு பொருளாதாரத் தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ விரைவில் உக்ரைன் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள சூழலில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டில், ரஷ்யாவுக்கு ஆதரவான அப்போதைய உக்ரைன் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு பெற்ற எதிர்க்கட்சியினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, விக்டர் யானுகோவிச் ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அமைக்கப்பட்ட உக்ரைனின் புதிய அரசுக்கு எதிராக கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர்.
ரஷ்ய ராணுவ உதவியுடன் சண்டையிட்ட அவர்கள், கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினர்.
இந்தச் சூழலில், உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியாவுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு படைகளை அனுப்பிய ரஷ்யா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
கடந்த 2014ஆம் ஆண்டில் ரஷ்யாவால் இணைத்துக் கொள்ளப்பட்டு சர்ச்சையான கிரைமியா தீபகற்பத்துக்கு அப்பால் உள்ள கருங்கடல் மற்றும் அஸோவ் கடல் பகுதிகளில், உக்ரைன் தனது போர்க் கப்பல்களை நிறுத்தியதால் இரு நாடுகளுக்கிடையில் மோதல் ஆரம்பமானது.
இதனையடுத்து, உக்ரைனின் மூன்று கடற்படைக் கப்பல்களை தாக்கி ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்தது.
அத்தோடு, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் நீரிணைக்குக் கீழே உள்ள ஒரு பாலத்தில் தனது ராங்கர் கப்பல்களை ரஷ்யா நிலைநிறுத்தியது. அஸோவ் கடலுக்குச் செல்லும் ஒரே பாதையாக கெர்ச் நீரிணை அமைந்துள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் இதுவரை 13,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், கிழக்கு உக்ரைனில் கடந்த ஐந்தரை வருடங்களாக இடம்பெற்று வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அண்மையில் நடைபெற்ற முதலாவது நேரடிப் பேச்சுவார்த்தை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுக்கு இடையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.