கிரைமியா துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு
கிரைமியாவிலுள்ள கல்லூரியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்த சுமார் 30 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) குறிப்பிட்டுள்ளது.
கிரைமியாவிலுள்ள கல்லூரியொன்றில் 18 வயதான மாணவன் ஒருவர் நேற்று நடத்திய குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் மனநிலை மற்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்களின் சாட்சிகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவன் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது சடலம் கல்லூரிக்கு அருகில் கிடைத்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அவரது உறவினர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவன் அங்கிருந்த வாயு கொள்கலன் ஒன்றின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதோடு, அது வெடித்ததன் காரணமாகவே அதிகளவானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு கெர்ச் நகரிலுள்ள தேவாலயத்தில் இன்று அஞ்சலி நிகழ்வொன்றும் நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் மலர்வைத்து தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
உக்ரைனிலிருந்து பிரிந்த கிரைமியாவை கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா இணைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.