கிளிநொச்சியில் நீதிமன்றத் தடையையும் மீறி ஆர்ப்பாட்டப் பேரணி!
In ஆசிரியர் தெரிவு February 4, 2021 9:36 am GMT 0 Comments 2051 by : Litharsan
கிளிநொச்சியில் நீதிமன்றத் தடையையும் மீறி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அமைப்பினால் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பழைய வைத்திய சாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணியானது ஏ9 வீதி வழியாக பழைய மாவட்ட செயலகம் வரை சென்றது. இதன்போது இலங்கை அரசின் கடந்த கால செயற்பாடுகளை கண்டித்தும், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், கறுப்பு கொடிகள் மற்றும் பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்ட பேரணியில் இணைந்தவர்கள் வாயினையும் கறுப்பு துணிகளால் கட்டியிருந்தனர். குறித்த பேரணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், யாழ் மாநகர சபையின் முதல்வர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறித்த போராட்த்திற்கு நீதிமன்ற தடையுத்தரவு பொலிசாரினால் பெறப்பட்டிருந்தபோதிலும் அதனை மீறி குறிதத் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த பேரணியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி, இன்றைய போராட்டத்திற்கு கலந்து கொள்ளவிருந்த மக்களை புதுக்குடியிருப்பில் பொலிஸார் தடுத்தவைத்தமைக்கு கண்டனம் தெரிவித்தார்.
இதேவேளை, ஐ.நா.விற்கு தமிழர் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றை இன்று அனுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.