கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தலில்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஐவரில் இருவர் சிகிச்சை முடித்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை்த தெரிவித்துள்ளார்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 516 பேரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் அல்லது தொற்று அபாயமுடையவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் திருவையாறு பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான ஆட்டுப்பட்டித் தெருவிலிருந்து வருகை தந்திருந்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்திலிருந்து அவர் குறுக்கு வழியைப் பயன்படுத்தியே இவ்வாறு வருகை தந்துள்ளார் என அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தமது சமூகப் பொறுப்பை உணராத தன்மையும், தங்களுடைய பாதுகாப்பு மற்றும் மற்றவருடைய பாதுகாப்புப் பற்றி அக்கறையில்லாத வகையிலும் செயற்பட்டுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அதிகளவான மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை எனவும், இதனால் அங்கு நெருக்கமான நிலை இல்லை என்றம் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.