கிளிநொச்சி, இத்தாவில் பகுதியில் அரச பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார்.
மஞ்சள் கோட்டியில் மிதிவண்டியில் பயணித்த முதியவரை அரச பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, விபத்தைத் தொடர்ந்து பளை வைத்தியசாலையில் குழப்பநிலையும் ஏற்பட்டிருந்தது.
இதுதொடர்பாக தெரியவருவதாவது, இத்தாவில் பகுதியைச் சேர்ந்த பொன்னையா சிவராசா (வயது 68) என்பவர் இன்று இரவு 7.30 மணியளவில் இத்தாவில் பகுதி வீதியில் மஞ்சள் கடவை ஊடாக மிதிவண்டியில் வீதியைக் கடந்துள்ளார்.
அவ்வேளையில், திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற அரச பேருந்து அவரை மோதியுள்ளது.
சம்பவத்தை அடுத்து அவரை மக்கள் உடனடியாக வாகனம் ஒன்றில் பளை ஆதார வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும், அங்கு கூடியவர்கள் சிலர் மருத்துவர்கள் மருத்துவம் பார்க்காமலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகக் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டு வாதிட்டதால் அங்கு குழப்பநிலை நிலவியுள்ளது.
இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.