கிளிநொச்சி தேவாலயத்தை இலக்கு வைத்த பயங்கரவாதி! – வெளிவரும் உண்மைகள்
In இலங்கை April 27, 2019 8:26 am GMT 0 Comments 3326 by : Dhackshala
உயிர்த்த ஞாயிறன்று கிளிநொச்சி தேவாலயத்திலும் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததாக கிளிநொச்சி புனித திரேசாள் தேவாலய பங்கு தந்தை அருட்பணி ஏ.ஜே.ஜேசுதாஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அசாதாரண சூழலில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சர்வமத ஒன்று கூடல் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த ஒன்றுகூடல் இன்று காலை 9.30 மணியளவில் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த ஒன்று கூடலில் சர்வ மத தலைவர்கள் பலரும் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் கலந்துகொண்டார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே கிளிநொச்சி புனித திரேசாள் தேவாலய பங்கு தந்தை அருட்பணி ஏ.ஜே.ஜேசுதாஸ் அடிகளார் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியிலும் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெறவிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களாக பொலிஸாரினால் இனங்காணப்பட்டு தேடப்படுவோர் குறித்த விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதில் ஒருவர் தமது தேவாலத்திற்கு கடந்த 21ஆம் திகதி காலை 5.45 மணியளவில் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தினம் அதிகாலை வழமைபோன்று தேவாலயத்தின் கதவை திறந்து தான் உள்ளே சென்றபோது குறித்த நபர் தேவாலயத்தின் மத்தியில் நின்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போதைய கூழ்நிலையில் தான் அவரை சந்தேகக் கண்கொண்டு பார்க்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.