கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 419ஆக அதிகரிப்பு!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரையில் கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனைகளில் 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களாக அக்கரைப்பற்றில் 12பேரும் ஆலையடிவேம்பில் மூவர் இனங்காணப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பகுதியில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 419ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களில் இதுவரையில் 256பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் லதாகரன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையினை உணராமல் சிலர் செயற்படுவதாகவும் இதன்காரணமாக ஏனையவர்களும் பாதிக்கப்படும் நிலையேற்படுவதாகவும் மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.