கிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
In இலங்கை December 1, 2020 9:36 am GMT 0 Comments 1597 by : Dhackshala
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் திருகோணமலை ஊடாக சூறாவளியாக ஊடறுக்கும்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.
தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள காலநிலை தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு அருகிலும் தென் கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாகவும் காணப்படுகின்ற தாளமுக்கமானது கடந்த 6 மணித்தியாலயங்களில் மணிக்கு 10 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து, தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.
இது தற்போது திருகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்காக 530 கிலோமீற்றர் தூரத்திலும் கன்னியாகுமரியில் இருந்து கிழக்கு தென் கிழக்காக 930 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுகின்றது.
இது அடுத்துவரும் வரும் 24 மணித்தியாலத்தில் சூறாவளியாக வலுவடைந்து திருகோணமலை பிரதேசத்திற்கு நாளை 2ஆம் திகதி மாலை அல்லது இரவு வேளையில் ஊடறுக்கும் என என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் மற்றும் ஹம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டத்தில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தத் தாக்கத்தினால் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே இதன்போது, கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களிலுள்ள மக்களை அவதானமாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.