கிழக்கு ஹெளட்டாவில் விமானத் தாக்குதல்
சிரியாவின் கிழக்கு ஹெளட்டா பகுதியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்களுக்கும் அரச தரப்பினருக்கும் இடையில் கடந்த ஏழு வருடங்களாக தொடர்ச்சியாக மோதல் இடம்பெற்று வருவதுடன் குறித்த பகுதியில் ரஷ்ய ஆதரவில் தினம்தோறும் 5 மணித்தியாலங்கள் யுத்த நிறுத்தமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 146 பொதுமக்கள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறிருக்கையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட விமான தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் காயம் என 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.
சிரியாவின் கிழக்கு ஹெளட்டா பகுதி அண்மைக்காலமாக சர்வதேசத்தின் கவனத்தை திருப்பியுள்ளது. குறித்த பகுதியில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் உணவு மற்றும் மருந்துவ வசதிகள் இன்றி அல்லல்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.