குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான விதிகள் குறித்த அறிவிப்பு!
In இந்தியா February 3, 2021 10:21 am GMT 0 Comments 1429 by : Krushnamoorthy Dushanthini

‘சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான விதிகள் தயார் செய்யப்பட்டு வருவதாக லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலமாக அளித்துள்ள பதிலில் மேற்படி கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் அளித்துள்ள எழுத்து மூலமான பதிலில், “இந்த சட்டத்துக்கான விதிகளை உருவாக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் துணைக் குழுக்கள் கால அவகாசம் அளித்துள்ளன.
அதன்படி லோக்சபா துணைக் குழு ஏப்ரல் 9 வரையிலும், ராஜ்யசபாவின் துணைக் குழு ஜூலை 9ம் திகதிவரையும் அவகாசத்தை நீட்டித்துள்ளன. இந்த சட்டத்துக்கான விதிகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டமூலம் கடந்த ஆண்டு ஜனவரி 10 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தின்படி அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் சிறுபான்மையினராக இருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவர், சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கப்படும்.
இந்த திருத்தச் சட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.