குண்டுடன் பயணித்த விமானத்தையே சுடுமாறு உத்தரவிட்டேன்! – புட்டின்
In ஏனையவை March 12, 2018 5:30 am GMT 0 Comments 2021 by : Suganthini

கடந்த 2014ஆம் ஆண்டு குண்டொன்றுடன் பயணிகள் விமானமொன்று பயணிப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில், அவ்விமானத்தைச் சுட்டு வீழ்த்துமாறு தான் உத்தரவிட்டிருந்ததாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அத்தகவல் பொய்யாதென தெரியவந்ததையடுத்து விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவில் இம்மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட ஆவணப்பட விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, “கடந்த 2014ஆம் ஆண்டு, உக்ரைனிலிருந்து துருக்கி நோக்கிப் பயணித்த விமானமொன்று கடத்தப்பட்டதாகவும், அவ்விமானத்தின் மூலம் சொச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்போட்டியை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அவ்விமானம் குண்டொன்றுடன் பயணிப்பதாகவும், எமக்குத் தகவல் கிடைத்தது. இவ்வாறான சூழ்நிலையில், அவ்விமானத்தைச் சுட்டு வீழ்த்த நான் உத்தரவிட்டேன். இருப்பினும் சில நிமிடங்களின் பின்னர், அத்தகவல் பொய்யானதென்று தெரியவந்த நிலையில், அவ்விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை” என அவர் கூறியுள்ளார்.
உக்ரைனிலிருந்து துருக்கிக்கு 110 பயணிகளுடன் பயணித்த போயிங் 737-800 இலக்கமுடைய விமானத்தில் பயணியொருவர் குண்டை வைத்திருந்தாகவும், சொச்சிக்கு விமானம் திசைதிருப்பப்பட்டதாகவும் ஊடகவியலாளரொருவர் இந்நிகழ்வில் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்தபோதே, ஜனாதிபதி புட்டின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.