குண்டு தாக்குதலால் சுற்றுலாத்துறை 30% வீழ்ச்சி? 26,000 கோடி நட்டம்?
In இலங்கை April 27, 2019 1:45 am GMT 0 Comments 3164 by : Arun Arokianathan

தொடர் குண்டு வெடிப்புகளால் நாட்டின் சுற்றுலாத்துறையில் 30 சதவீதம் வீழ்ச்சி ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றபோதும் சர்வதேச பயங்கரவாதத்தின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்த ஏனைய நாடுகளின் அனுபவங்களை பாடமாகக் கொண்டு விரைவில் இத்துறையை மீளக் கட்டியெழுப்புவோமென நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார்.
இதனால் இலங்கைக்கு சுமார் ஒன்றரைக் கோடி பில்லியன் டொலர்கள் (26,000 கோடி) நட்டம் ஏற்படலாமென நிதி அமைச்சு மதிப்பிட்டுள்ள போதும் அரசாங்கம் இக்காலப்பகுதிக்குள் செலுத்த வேண்டிய கடன்களை தவறாது செலுத்த முன்வருமென்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன் இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தை காரணமாகக் கொண்டு முதலீட்டாளர்கள் இலங்கை வரும் தமது யோசனையை பின்வாங்கக் கூடாது என கேட்டுக்கொண்ட அமைச்சர், அவ்வாறு முதலீடு செய்ய முன்வரும்
முதலீட்டாளர்களுக்கு முன்னரிலும் அதிக சலுகைகளை அரசாங்கம் பெற்றுத்தருமென்றும் வாக்குறுதி அளித்தார்.
இதேவேளை பொருளாதாரத்துக்கு உந்துதல் அளிக்கும் வகையில் அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்பரேசன் இலங்கையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட மூன்று செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு முன்வந்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நிதியமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சமரவீர இவ்வாறு கூறினார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் தொடர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றன. ஏப்ரல் 20 ஆம் திகதி வரை நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிறந்த முறையில் முன்னேற்றம் கண்டிருந்ததுடன் ஸ்திர நிலைமையிலும் இருந்தது. பொருளாதாரத்தை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். எனினும் இதனால் சுற்றுலாத்துறையில் ஒரு 30 சதவீத வீழ்ச்சியையே நாம் சந்திக்க நேரிடும். அத்துடன் இது உள்நாட்டுப் பிரச்சினையல்ல. சர்வதேச பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல். இது எமது நாட்டுக்கு மட்டுமன்றி உலக நாடுகளுக்குள்ள பொதுவான சவால். இதனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புரிந்து கொள்வார்களென நம்புகின்றோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
உலகில் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த 19 ஆண்டுகளுள் சர்வதேச பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் 15 மடங்கால் அதிகரித்துள்ளது. அபிவிருத்தியடைந்த சகல நாடுகளும் சர்வதேச பயங்கரவாதத்துக்கு முகம் கொடுத்துள்ளன. இதில் அமெரிக்காவே அதிகம் அச்சுறுத்தல் உள்ள நாடாகும். தேர்ச்சி பெற்ற புலனாய்வுத்துறையுள்ள நாடுகளிலேயே பயங்கரவாத சம்பவங்களை முன்னரே தடுத்து நிறுத்த முடியாமலிருக்கும் வகையில் பயங்கரவாதம் புதிய வடிவங்களில் முன்வரும் நிலையில் இலங்கையில் மட்டும் எவ்வாறு புலனாய்வுத் துறையையும் அரசாங்கத்தையும் குறை கூற முடியுமென்றும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் இடம்பெற்றுள்ள இந்த கோரச் சம்பவத்தை காரணமாகக் கொண்டு பல அரசியல்வாதிகளும் அடிப்படைவாதிகளும் சில சர்வதேச சமூகமும் சுய இலாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றார்கள். அவற்றுக்கு நாம் இடம்கொடுக்க முடியாது. முஸ்லிம்கள் இந்நாட்டில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்கின்றார்கள். சிறியதொரு குழுவினர் மேற்கொண்ட செய்கைக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் எம்மால் குற்றம் சுமத்த இயலாது. நாம் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும். அதேநேரம் துப்பாக்கியை தூக்குவதாலோ சோதனைச் சாவடிகளை அமைப்பதாலோ மட்டும் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது. அனைவரும் ஒன்று திரண்டு மிகவும் சூட்சுமமான முறையில் இப்பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் மேலும் கூறியதாவது,-
இச்சம்பவத்தையடுத்து பல உலக நாடுகள் எம்மை தொடர்புகொண்டு ஆறுதல் கூறுகின்றன. இதே கடந்த அரசாங்கமாக இருந்திருந்தால் எந்தவொரு நாடும் இலங்கையை திரும்பிப் பார்த்திருக்காது. ஒருவர் முஸ்லிம் என்றதற்காகவும் தற்கொலை குண்டுதாரி மற்றும் அவரது குடும்பத்தாருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காகவும் எவரையும் நாம் குற்றம் சொல்ல இயலாது. எதெற்கெடுத்தாலும் ஒரே எண்ணெய் என்பதுபோல எல்லா விடயத்துக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீனையே குற்றம் சொல்வது தவறு. விசாரணைகளுக்குப் பின்னர் சட்டம் குற்றவாளிகளை தீர்மானிக்கும். தொழில் காரணமாக எந்தவொரு புலனாய்வு அதிகாரியையும் இந்த அரசாங்கம் சிறையில் அடைத்து வைக்கவில்லை. அவர்கள் ஆட்கடத்தல், கொலை, கொலை செய்ய ஆட்களை பணித்தமை, வெ ள்ளை வேன் விவகாரம் ஆகியவற்றுடன் தொடர்புபட்டதன் காரணமாகவே சட்டத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.