குண்டு வெடிப்பு அசம்பாவிதங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிதியுதவி!
In விளையாட்டு May 2, 2019 10:07 am GMT 0 Comments 2160 by : adminsrilanka
கடந்த மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு அசம்பாவிதங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க பல தரப்பினரும் தற்போது முனைப்பு காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கட்டும் தனது பங்கிற்கு நிதியுதவிகளை வழங்க முன்வந்துள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நிவாரண உதவி நிதியத்திற்காக 2 மில்லியன் ரூபாயை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி இடம்பெற்ற அதன் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின்போது நிதியுதவியை வழங்குவதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. அதேவேளை, 2019 உலக கிண்ண தொடருக்காக செல்லவுள்ள இலங்கை அணி தொடர்பாக கவனம் செலுத்துவோம்.
உலகக் கிண்ண அணிக்கான முகாமையாளராக அஷாந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய தெரிவுக்குழுவின் தவிசாளராக செயற்படுவதுடன், உலகக் கிண்ண சுற்றுலாவுக்கான தெரிவாளராகவும் பணியாற்றினார். தற்போது புதிய பதவியையும் அவர் ஏற்றுள்ளார்.
இதனிடையே, உலகக் கிண்ண இலங்கை அணிக்கான திட்டமிடல் முகாமையாளராக சந்திம மாபாதுன்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் கிரிக்கட் அணியுடன் சர்வதேச சுற்றுப்பயணங்களின்போது பங்குகொள்வது வழக்கம்.
இந்தநிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள துயரமான சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு உலகக் கிண்ணத் தொடருக்கு செல்லும் இலங்கை அணிக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகத்தினர் கவனம் செலுத்தியுள்ளனர்.
இதன்படி, ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஆகியவற்றின் ஆலோசனையுடன் இந்த விடயத்தில் பணியாற்றுகின்றது. இதுதவிர, வேறு சில பதவி நியமனங்களும் ஸ்ரீலங்கா கிரிக்கட்டினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னாள் கிரிக்கட் வீரர் ரோய் டயஸ், இலங்கை ஏ அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ள இளையோர் கிரிக்கட் போட்டியில் பங்குகொள்ளவுள்ள அணிக்கு அவர் சிறப்பான பயிற்சிகளை வழங்கி வருகின்றார்.
இந்த சுற்றுக்கான அணி தெரிவுக்குழுவில் பங்கெடுத்துள்ள சமிந்த மென்டிஸ், ஏ அணியின் முகாமையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், வளர்ந்துவரும் அணியின் பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, அந்த அணி எதிர்வரும் ஜூன் மாதம் தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள சுற்றுப்போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அணியின் முகாமையாளராக தேசிய தெரிவுக் குழுவில் உறுப்பினராக உள்ள ஹேமந்த விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.