குருந்தூரில் மீட்கப்பட்ட சிதைவுகள் அநுராதபுர காலத்திற்குரியவை – தொல்பொருள் திணைக்களம்
In ஆசிரியர் தெரிவு February 11, 2021 8:11 am GMT 0 Comments 1938 by : Dhackshala

முல்லைத்தீவு – தண்ணீறூற்று குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் லிங்கத்தை ஒத்த சின்னங்கள் உள்ளிட்ட சில தொல்பொருட்கள் அடையாளம் காணப்பட்டன.
குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியின்போதே இவை மீட்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த சிதைவுகள் அநுராதபுர காலத்திற்குரியவை என்றும் அங்கு பௌத்த தூபி காணப்பட்டமைக்கான சான்றுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய, கடந்த ஜனவரி மாதம் 18ஆம் திகதி குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த அகழ்வுப் பணிகள் இம்மாத இறுதியில் நிறைவு செய்யப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் NKS.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நேற்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.