குறுகிய கால அரசியல் இலாபத்தின் நோக்கமே மாணவர்கள் கைது – ஸ்ரீகாந்தா

யாழ். பல்கலைக்கழக மாணவர்ளை கைது செய்தமையானது குறுகிய கால அரசியல் இலாபத்தின் நோக்கமானது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளா் நாயகம் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை முறியடிக்கும் வேலைத்திட்டத்திற்குள் குறுகிய அரசியல் இலாபம் தேடும் முயற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமையின் வெளிப்பாடாக இதனைக் கருத முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், “இலங்கைத் தீவு முன்னெப்பொழுதுமே சந்தித்திராத நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் அனைத்து இனங்களினதும் ஒத்துழைப்பு, தொடர்ந்தும் தேவைப்படுகின்றது. வெளிநாட்டுத் தளமொன்றில் இருந்து ஏவி விடப்பட்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை முறியடித்து, முற்றுமுழுதாக துடைத்தெறியும் பாரிய நடவடிக்கைகளுக்குள், குறுகிய அரசியல் குறிக்கோள்களைக் கொண்ட நிகழ்ச்சி நிரல் ஒன்றையும் உள்ளடக்கி முன்னெடுக்க சில அரசியல் தரப்புக்கள் முயற்சிக்கின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னோடிகள் இருவர் மீது பயங்கரவாத தடைச் சட்டமும் அவசரகால சட்ட விதிகளும், அற்பசொற்ப சாட்டுக்களை முன்வைத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, வடக்கில் காணப்படும் அமைதியை சீர்குலைத்துவிடும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீதான வழக்கு விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று நாம் அரசாங்கத்தைக் கோருகின்றோம். முஸ்லிம் மக்கள் உட்பட இலங்கையின் அனைத்து சமூகங்களின் ஒன்றுபட்ட செயற்பாடே இன்றைய கட்டாயத் தேவை என்பதை வலியுறுத்துகின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.