குளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு!
In இலங்கை April 22, 2018 4:41 pm GMT 0 Comments 1503 by : Ravivarman
வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள மலசலகூடத்திற்கான குழி குளத்தினுள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஆதிவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர்.
வவுனியா, ஆதிவிநாயகர் கோயில் வைரவபுளியங்குளம் குளத்தின் அருகில் அமையப்பெற்ற ஒரு கோவிலாகும். இந்த கோவிலில் கடந்த சில மாதங்களிற்கு முன் ஆலய உற்சவ காலங்களில் கோவிலில் தங்கும் குருக்களிற்காக மலசலகூடம் ஒன்று அமைக்கப்பட்டது.
குறிப்பாக இந்த மலசலகூடவசதிகள் ஆலய எல்லைக்குள்ளாகவே அமைக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்ட மலசலகூடத்திற்குரிய குழி வைரவபுளியங்குளம் குளத்திற்குள் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பபட்டன.
இதனால் வைரவபுளியங்குளத்து நீர் மாசடைவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால், கழிவுகள் குளத்திற்குள் விடப்படுவதாக தெரிவித்து கோயில் நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அமைக்கப்பட்ட மலசலகூடமும் அதனோடு இணைந்த குழியும் கோயில் எல்லைக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதேவேளை இன்று வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு சென்று இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், ‘கோயிலினுள் அமைக்கப்பட்ட கட்டடத்திற்கு சமாந்தரமாகவே கோயில் காணிக்குள் கட்டப்பட்டிருக்கிறது. சுகாதார முறையில் மலசல கூட குழி அமைப்பதாயின் சீமெந்தினால் கட்டி பூசியிருந்தல் பக்றீரியாக்கள் வெளியே செல்லாது.
அவ்வாறு இவ் மலசலகூடம் கட்டப்பட்டிருந்தால் இக்கழிவுநீர் வெளியே செல்வதற்கான சந்தர்ப்பம் எதுவும் இல்லை. இவ்வாறான விடயங்களை ஆராயாமல் இவ்வாறான குற்றச்சாட்டை பொது நிறுவனம் ஒன்றின் மீது சுமத்தியிருப்பதாகதான் பார்க்க கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் சுகாதாரப்பகுதி உரிய முறையில் கையாள வேண்டும்’ என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.