குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு – பலர் காயம்!

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புள்ள தோட்டப் பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (வியாழக்கிழமை) மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கெலிவத்தை தோட்டத்திலிருந்து திம்புள்ள தோட்டத்திற்கு வந்து தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, மரத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்து இவ்வாறு தொழிலாளர்கள் மீது கொட்டியுள்ளது.
குளவி கொட்டியதில் கடுமையாக பாதிக்கப்பட்டவரை உடனடியாக கொட்டகலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கெலிவத்தை தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ஈஸ்வரன் (வயது – 56) என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.