கூட்டமைப்பைச் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்
In இலங்கை January 7, 2021 4:01 am GMT 0 Comments 1422 by : Dhackshala

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இரு நாடுகளினதும் கூட்டு முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்த அவர், அவருடன் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார். மேலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இந்த சந்திப்பில் இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.