கேரளாவில் மகளிர் மனித சுவர் போராட்டம்: பொலிஸ் பாதுகாப்பு தீவிரம்
In இந்தியா January 1, 2019 9:26 am GMT 0 Comments 1410 by : Yuganthini

கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள மகளிர் மனித சுவர் போராட்டத்திற்கு மாவோயிஸ்ட் மற்றும் இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளமையால் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையால், அத்தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்களினால் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஐய்யப்ப பக்தர்களின் போராட்டத்திற்கு எதிராக, சீர்த்திருத்தங்களை மக்கள் ஏற்க வேண்டுமென வலியுறுத்தி, கேரள அரசு, மகளிர் மனித சுவர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை இன்று முன்னெடுத்துள்ளது.
இப்போராட்டம் கேரளாவின் வடக்கு எல்லையான காசர்கோட்டில் இருந்து தென் எல்லையான பாறசாலை வரை நடைபெறவுள்ளது.
அந்தவகையில் நடைபெறவுள்ள இப்போராட்டத்திற்கு கேரளாவிலுள்ள பல்வேறு சமூக அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் சுமார் 31 இலட்சம் பெண்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை மனித சுவர் போராட்டத்திற்கு இந்து அமைப்புகள் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்பு ஆகியனவும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஆகையால் இப்போராட்டம் நடைபெறும்போது பிரச்சினைகள் தோன்றுவதற்கு அதிகளமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றமையால் கேரளாவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.