கைதியின் முதுகில் மத அடையாள சூடு: தீவிர விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
In இந்தியா April 20, 2019 7:58 am GMT 0 Comments 1995 by : Yuganthini

திஹார் சிறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவரின் முதுகில் மத அடையாளம் சூடு வைக்கப்பட்டமை குறித்து விசாரணையை முன்னெடுக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியின் சீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த ஷபீர் (நபீர்- 34 வயது) என்ற சந்தேகநபரின் முதுகிலேயே ஓம் என்ற இந்து மத அடையாளம் சூடு வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக நபீரின் உறவினர்கள் டெல்லி நீதிமன்றத்தில் முறைப்பாட்டு மனுவொன்றை கையளித்துள்ளனர்.
அதில் சிறை அதிகாரிகளால் ஷபீர் துன்புறுத்தப்படுவதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அம்மனுவில் உறவினர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த மனு மீதான வழக்கின் விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) டெல்லி நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட ஷபீர், நீதிபதி ரிச்சா பராஷார் முன்னிலையில் தனது சட்டையைக் கழற்றி முதுகிலிருந்து சூடு அடையாளத்தைக் காட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, டெல்லி பெருநகர நீதவான் நீதிமன்ற விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டதுடன் முதுகிலுள்ள அடையாளம் குறித்து மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சிறையிலுள்ள கண்காணிப்பு கமரா பதிவுகளைத் திரட்டி சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன் ஷபீரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சிறைத்துறைக்கு நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஷபீர் டெல்லியிலுள்ள இர்ஃபான் கேங் என்ற ஆயுதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்றும் அடிக்கடி குற்றங்கள் செய்து சிறைக்கு வருபவர் மட்டுமல்லாமல் சிறைக்கு வந்தாலும்கூட எப்போதும் விதிமுறைகளை மீறி சர்ச்சை செய்பவர் என்றும் சிறை அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.