கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது
In இலங்கை January 28, 2021 6:04 am GMT 0 Comments 1389 by : Yuganthini
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
பொலிஸார் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும், நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பிற்றிய நிலையில் மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபியருகே நடைபெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார், தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவர் கி.சேயோன், வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தி.தீபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்திவேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1987 ஜனவரி 28ஆம் திகதி இடம்பெற்ற இறால் வளர்ப்பு பண்ணை படுகொலையும் 1992 ஜுன்12ஆம் திகதி இடம்பெற்ற மகிழடித்தீவு படுகொலையும் சேர்த்து ஏறக்குறைய 239பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
தமிழர்களையும் நினைவு கூரும் வண்ணமே ‘கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2000ஆம் ஆண்டு மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.