கொரோனாத் தொற்றுக்கு உள்ளான பல்கலைக்கழக மாணவி பரீட்சை எழுத விசேட ஏற்பாடு!
In Uncategorized February 16, 2021 5:12 am GMT 0 Comments 1025 by : Vithushagan

கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் 19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் யாழ். பல்கலைக்கழக கலைப் பீட மாணவி தனது ஆண்டு இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விசேட ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
பதுளையைச் சேர்ந்த கலைப்பீட மாணவி ஒருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், கடந்த வாரம் அடையாளப்பட்டிருந்தார். அதனையடுத்து அவர், யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் 19 சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி பல்கலைக்கழகத்தின் ஆண்டு இறுதிப்பரீட்சை அவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. அந்த மாணவியின் சக மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றும் அதே நேரத்தில், சிகிச்சை நிலையத்தில் குறித்த மாணவியும் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது.
பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கலைப் பீடாதிபதி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறித்த மாணவியின் பரீட்சைக்குத் தேவையான சகல ஏற்பாடுகளையும் சிகிச்சை நிலையத்தினுள் மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் கோவிட் 19 சிகிச்சை நிலைய நிர்வாகம் ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.