கொரோனா கொத்தணிக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்படுகிறது பேலியகொட மீன் சந்தை!

பேலியகொட மீன் சந்தையில் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சந்தை செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் சந்தையை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு இன்று (திங்கட்கிழமை) நேரடி விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.
இதனடிப்படையில் முதற்கட்டமாக எதிர்வரும் புதன்கிழமை சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
பேலியகொட மத்திய மீன் சந்தையில் கொரோனா பரவல் உறுதிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி சந்தை செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
நாடளாவிய ரீதியில் இருந்து வருகின்ற கடற்றொழிலாளர்களும் கடலுணவு வியாபாரிகளும் பேலியகொட மீன் சந்தையினை தமது தொழில் நடவடிக்ககைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய சிலரின் ஊடாகப் பரவியதாக தெரிவக்கப்படும் நிலையில் பேலியகொட கொத்தணி மூலம் நாட்டின் பல பாகங்களிலுமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கடலுணவு வியாபாரமும் பாரிய வீழ்ச்சியடைந்து கடற்றொழில்சார் செயற்பாட்டாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்திருந்தது.
இதனால், குறித்த மீன் சந்தையில் கொரோனா பரவல் வீரியமடைவதற்கு ஏதுவான காரணிகள் தொடர்பாக ஆராய்ந்து அவற்றைக் களைவதற்காக கடற்றொழில் அமைச்சரினால் துறைசார் நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த துறைசார் குழுவினரின் பரிந்துரைக்கு அமைய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் புதன்கிழமை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சந்தை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.