கொரோனா தடுப்பூசி விநியோக நடவடிக்கை : மதத் தலைவர்களின் உதவியை நாடும் மத்திய அரசு!
In இந்தியா November 27, 2020 2:32 am GMT 0 Comments 1413 by : Krushnamoorthy Dushanthini

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விநியோக பணிகளில் மத தலைவர்களின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில், “ கொரோனா தடுப்பூசி விநியோகத்துக்கான திட்டமிடல் மற்றும் ஆயத்தப்பணிகளை மேலும் பரவலாக்கும் நோக்கத்துடன் கொரோனா தடுப்பூசி அறிமுகத்துக்கான ஒன்றிய சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.
இந்த குழுக்களில் அரசு துறைகளின் பிரதிநிதிகள், வளர்ச்சி பங்காளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், உள்ளூர்செல்வாக்கு பெற்ற மனிதர்கள் மற்றும் மத தலைவர்கள் இடம்பெற வேண்டும்.
தடுப்பூசிக்கான பயனாளர்களின் தரவுகளை நிர்வகித்து மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்குதல், திட்டமிடல், தடுப்பூசி சேமித்தலுக்கான திட்டமிடல், ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பு ஏற்றல் போன்ற பணிகளை இந்த குழுவினர் மேற்கொள்வார்கள்.
குறிப்பாக தடுப்பூசி விநியோகத்தின் மேற்பார்வை, உள்ளூர் சூழலை அடிப்படையாக கொண்டு தகவல் தொடர்பு அமைத்தல் போன்றவற்றை இந்த குழு உறுதி செய்வதுடன், தடுப்பூசி தொடர்பான வதந்திகள் பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் மத தலைவர்கள் உள்ளிட்ட உள்ளூர் செல்வாக்குள்ள நபர்களின் பங்களிப்பை அதிகரித்து தடுப்பூசி குறித்த தவறான தகவல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தேவையான இடங்களுக்கு தடுப்பூசி போதுமான அளவு வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.