கொரோனா நோயாளர் தப்பியோடியதன் எதிரொலி – பலர் தனிமைப்படுத்தலில்
In இலங்கை December 28, 2020 5:40 am GMT 0 Comments 1536 by : Dhackshala

சபுகஸ்கந்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச்சென்றதை அடுத்து குறித்த பகுதியில் வசிக்கும் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தப்பிச்சென்ற நபர் சப்புஸ்கந்தையின் மாகொல வடக்கில் அவரது காதலி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த ஆறு வீடுகளைச் சேர்ந்த 22 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட போது அல்லது சிகிச்சையளிக்கப்படும்போது தப்பியோடியவர்களுக்கு ஆதரவு வழங்கும் அனைவருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்
போதைப்பொருளிற்கு அடிமையான சப்புஸ்கந்தையைச் சேர்ந்த 22 வயதுடைய நிமேஸ் மதுசாங்க என்ற குறித்த சந்தேகநபர், சமீபத்தில் மஹர சிறையிலிருந்து விடுதலையானவர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீட்டில் சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சோதனை முடிவுகளில் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் காணாமல்போயிருந்தார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொதுசுகாதார பரிசோதகர்கள் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் சப்புஸ்கந்தையின் மாகொல வடக்கில் அவரது காதலி வீட்டில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.