கொரோனா வைரஸ் எதிரொலி: ஒலிம்பிக் போட்டிகளிற்கான ஏற்பாடுகள் பாதிப்பு!
In விளையாட்டு February 7, 2020 6:04 am GMT 0 Comments 1921 by : Anojkiyan
ஜப்பானில் நடப்பு ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகளிற்கான ஏற்பாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டோசிரோ முட்டோ, இதுகுறித்து கூறுகையில், “ஒலிம்பிக் போட்டிகளை இரத்துச் செய்யும் நோக்கம் எதுவும் இல்லை. எனினும் கொரோனோ வைரஸ் பரவி வருவதால் இன்னமும் 170 நாட்களில் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக்போட்டிகளிற்கான முன்னேற்பாடுகளிற்கு பாதிப்பு ஏற்படலாம்.
ஒலிம்பிக்போட்டிகளை நோக்கிய உத்வேகத்திற்கு கொரோனோவைரஸ் தாக்கத்தினால் பாதிப்பு ஏற்படலாம் என்பது குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.
கொரோனோ வைரஸ் பாதிப்பிற்கு விரைவில் முடிவு கட்டப்படும் என எதிர்பார்க்கின்றேன்’ என கூறியுள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது சந்தேகம் என சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால், கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமென ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அண்மையில் அறிவித்தார்.
இந்த நிலையில், ஏற்பாட்டுக் குழுவின் இந்த அறிவிப்பு பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கு ஜப்பான் கடந்த இரண்டு வருடங்களாக, பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக அரசின் பெருமளவான நிதியினால் கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கப்பட்டு வந்த பிரமாண்ட விளையாட்டு அரங்குகள் தற்போது போட்டிகளை நடத்த தயாராகவுள்ளது.
குறித்த கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரங்கத்தின் கூரைகள் மரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும் வீரர்களை குளிர்சியாக வைத்திருக்க முடியுமென வடிவமைப்பாளர்கள் நம்புகின்றனர்.
குறித்த கோடைக்கால ஒலிப்பிக் தொடரில், பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முகத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணும் முறைமையை போட்டி அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தவுள்ளனர்.
கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை, ஜப்பானின் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
206 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில், 33 விளையாட்டுகளில் இருந்து 339 விiளாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் 11,091 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தோடு, இந்த ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், 7 புதிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தவுள்ளன. இதனை சர்வதேச ஒலிம்பிக் குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேபோல, கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது
டோக்கியோவில் உள்ள புதிய தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில், 540 பிரிவுகளில் 22 விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.