கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து ஆய்வுசெய்ய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து ஆய்வுசெய்ய சர்வதேச நிபுணர் குழு அடுத்த மாதம் சீனா செல்லவிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
கொரோனா தீநுண்மி எந்த உயிரினத்தில் தோன்றி, அது மனிதர்களுக்குப் பரவத் தொடங்கியது என்பது குறித்த ஆய்வுகளை சர்வதேச நிபுணர் குழு சீனாவில் மேற்கொள்ளவிருக்கிறது.
சீனாவின் ஹூபேய் மாகாணம்- வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, உலகம் முழுவதும் 190க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பரவியுள்ளது.
முன்னதாக உண்மைகளைக் கண்டறிய 10 நிபுணர்கள் அடங்கிய குழுவை உலக சுகாதார அமைப்பு கடந்த ஜூலை மாதம் சீனாவுக்கு அனுப்பியது.
தொற்றுநோயியல் நிபுணர்கள், விலங்கு மருத்துவ வல்லுநர்களை உள்ளடக்கிய அந்தக் குழு, கொரோனாவின் தோற்றம் குறித்த சர்வதேசக் குழு விசாரணைக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டது.
அதிக நிபுணர்களைக் கொண்ட அந்த சர்வதேசக் குழு, கொரோனா தீநுண்மியின் பயணத்தை தொடக்கத்திலிருந்து கண்டறியும் வகையில், அந்த நோயால் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை ஆய்வு செய்யும் என்று கூறப்பட்டது.
எனினும், அந்தக் குழு எப்போது சீனா செல்லும் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வு செய்வதற்கான சர்வதேசக் குழு அடுத்த மாதம் சீனா செல்வதை உலக சுகாதார அமைப்பு தற்போது உறுதி செய்துள்ளது.
வூஹான் நகரிலுள்ள இறைச்சிச் சந்தையில்தான் கொரோனா நோய்த்தொற்று முதல் முதலாகப் பரவத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.