கொரோனா வைரஸ் : நோயாளிகள் எண்ணிக்கை 115 ஆக உயர்வு
In இங்கிலாந்து March 5, 2020 4:22 pm GMT 0 Comments 2723 by : S.K.Guna

பிரித்தானியாவில் மேலும் 30 புதிய நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் சுகாதாரத்துறையின் தகவலின்படி இந்த எண்ணிக்கை 85 ஆக இருந்தது.
ஸ்கொட்லாந்தில் ஏற்கனவே மூன்று புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
பிரித்தானியாவில் இப்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதன் இரண்டாம் கட்டத்துக்குச் சென்றுள்ளது என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
வரும் நாட்களில் கொரோனா வைரஸின் பாதிப்புக்கள் அதிகரிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எச்.எஸ்.பி.சி வங்கியின் கனரி வோர்ஃப் அலுவலகத்தில் உள்ள பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னர் அங்குள்ள பல பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு அல்லது இரண்டு மீற்றருக்குள் 15 நிமிடங்களுக்கு மேல் செலவிடும்போது வைரஸ் பரவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட நபர் வீதியில் நடந்து சென்றிருக்கக்கூடிய சூழ்நிலைகளில் ஆபத்து மிகக் குறைவு என்று அவர்கள் கூறினர்.
கொரோனா வைரஸ் மோசமான சூழ்நிலையை அடையும் கட்டத்தில் மக்கள் தொகையில் 80% வரை நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்றும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயதானவர்கள், பலவீனமானவர்களிடையே ஒப்பீட்டளவில் அதிக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
நன்றி news.sky.com
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.