கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட வுகானுக்கு விரைந்த மருத்துவக் குழு!

உயிர்களை காவுக் கொண்டுவரும் கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட, வுகானுக்கு மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீனா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
900 இற்க்கும் அதிகமான பேர் இடம்பெற்றுள்ள 7 மருத்துவக் குழுக்கள் வுகானைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பேர் உதவி செய்ய தயாராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷாங்காய், குவாங்துங், சிச்சுவான் மற்றும் இராணுவப் படையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் உள்ளடங்கிய உதவிக் குழுக்கள் வுகானுக்குச் சென்று நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபடவுள்ளன.
இதற்கிடையில், வுகான் நகரில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில், 1000 படுக்கைகளைக் கொண்ட ஒரு புதிய மருத்துவமனை கட்டியமைக்கப்பட்டு வருகின்றது. 2 வாரங்களுக்குப் பிறகு இது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
25ஆம் திகதி இரவு வரை, நாடளவில் 30 மாநிலங்கள் முக்கிய பொது சுகாதார அவசரநிலைக்கான முதல் நிலை அமைப்புமுறையை ஆரம்பித்து, மிக கண்டிப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டுள்ளன.
கொரோனா வைரஸ் நோய் தொற்று முதல்முறையாக வுகானிலேயே பரவத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அப்பகுதி முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.