கொரோனோ வைரஸ் : அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசாங்கம் இன்று அறிவிக்கும்
In இங்கிலாந்து March 12, 2020 10:02 am GMT 0 Comments 3387 by : S.K.Guna

கொரோனோ வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் அவசர அமைச்சரவைக் குழு (COBRA) இன்று கூடும் போது, மேற்கொள்ளப்படவுள்ள தந்திரோபாய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்ததையடுத்து கோப்ராக் குழு இன்று அவசரமாகக் கூடுகின்றது.
இந்த நடவடிக்கைகளில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூடுவது மற்றும் பெரிய அளவில் மக்கள் கூடுவதைத் தடைசெய்வது, வீட்டில் இருந்தவாறு வேலைசெய்யப் பணிப்பது முதலானவை உள்ளடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குளிருடன் இணைந்த அதிகரித்த வெப்பநிலை உடலில் இருந்தால் மக்களை வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கலாம் என ஸ்கொட்லாந்துக்கான அமைச்சர் அலிஸ்ரர் ஜாக் (Alister Jack) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இப்போது 460 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 387, ஸ்கொட்லாந்தில் 36, வடக்கு அயர்லாந்தில் 18 மற்றும் வேல்ஸில் 19 என்ற எண்ணிக்கையில் நோயாளர்கள் உள்ளனர்.
கொரோனோ வைரஸால் இதுவரையில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சர் நடின் டோரியஸுடன் தொடர்புகொண்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தனிமைப்படுத்தலில் இருப்பது உறுதி செய்யப்பட்ட்டுள்ளது. அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சோதனை முடிவுகளுக்காக அவர் காத்திருக்கிறார்.
இதற்கிடையில், டொனால்ட் ட்ரம்ப் 26 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணத்தடை விதித்துள்ளார். எனினும் பிரித்தானியா மற்றும் அயர்லாந்து அந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
வலுவானதும் அவசியமானதுமான கட்டுப்பாடுகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் 30 நாட்களுக்கு நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொரோனோ வைரஸ் காரணமாக இத்தாலி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. அங்கு உணவுப் பொருட்களுக்கான கடைகள் மற்றும் மருந்தகங்கள் தவிர மற்றைய அனைத்துக் கடைகளையும் மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நன்றி news.sky.com – bbc.co.uk
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.