கொரோன வைரஸைக் கட்டுப்படுத்த அவசரகாலநிலைச் சட்டம் அறிமுகம்
In இங்கிலாந்து March 18, 2020 9:50 am GMT 0 Comments 1598 by : shiyani

அரசாங்கத்தால் வகுக்கப்படவுள்ள அவசரகால கொரோனா வைரஸ் சட்டத்தின் கீழ், பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக மக்களைக் கைதுசெய்து தனிமைப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
நாளையதினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள அவசரகாலநிலை கொரோனா வைரஸ் சட்டம் வைரஸின் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கவும் தேசிய சுகாதார சேவையை ஆதரிக்கவும் தேவையான அதிகாரங்களை அமைச்சர்களுக்கு வழங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லாவிட்டால், விமான நிலையங்கள் அல்லது போக்குவரத்து மையங்களில் நடவடிக்கைகளை நிறுத்த எல்லைப் படையை அனுமதிப்பது மற்றும் நீதிமன்ற வழக்குகளில் வீடியோ விசாரணைகளை அதிகளவில் பயன்படுத்துதல் ஆகியவையும் இந்தச் சட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளன.
இந்தச் சட்டத்தின் கீழ் சமீபத்தில் ஓய்வுபெற்ற தேசிய சுகாதார சேவை மற்றும் வயது வந்தோருக்கான சமூகசேவை ஊழியர்கள் ஓய்வூதிய உரிமைகளை இழக்காமல் பணிக்குத் திரும்புவார்கள்.
அத்துடன் உடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்புத் துறையில் நோயாளிகளைப் பராமரிக்க உதவ முன்வந்தவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குணமடைந்த நோயாளிகளை மருத்துவமனைகளிலிருந்து தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு படுக்கைகளை விடுவிப்பதற்கு மருத்துவர்களுக்கு உதவும் பொருட்டு மருத்துவமனைகளில் காகிதப்பணி மற்றும் நிர்வாகத் தேவைகள் குறைக்கப்படவுள்ளது.
முதல் நாளிலிருந்து சுயமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சட்டரீதியான நோய்வாய்ப்பட்ட ஊதியம் வழங்கவும் இந்தச் சட்டம் அனுமதிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி itv.com
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.