‘கொவிரன் பரேகாட்’: ஈரான் தனது கொவிட்-19 தடுப்பூசியின் மனித சோதனையை தொடங்கியது!

மத்திய கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, ஈரான் தனது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மனித சோதனையைத் தொடங்கியுள்ளது.
சுகாதார அமைச்சர் சயீத் நமகி மற்றும் அறிவியல், தொழில்நுட்ப துணைத் தலைவர் சோரெனா சத்தாரி உள்ளிட்டோர் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்ட விழாவில், உயர் மட்ட மாநில அதிகாரியின் மகளான தயேபே மொக்பர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
இமாம் கோமெய்னியின் ஆணையை நிறைவேற்றுவதற்கான தலைமையகத்தின் தலைவரான முகமது மொக்பரின் மகளான தயேபே மொக்பர், இதன்மூலம் தடுப்பூசியை பெற்ற முதல் ஈரான் நபரானார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் முதல் நபர் என்பதால் மட்டுமல்ல, இந்த விஞ்ஞான செயல்முறை என் நாட்டில் மிகவும் முன்னேறியதால்’ என கூறினார்.
உள்ளூர் கொரோனா வைரஸ் தடுப்பூசி முயற்சிகளைக் கவனிக்கும் ஒரு அரசு நடத்தும் நிறுவனமான ‘ஷிஃபா பார்மட்’ நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசிக்கு ‘கொவிரன் பரேகாட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
எட்டு தடுப்பூசி நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் பெப்ரவரி மாத பிற்பகுதியில் விலங்கு சோதனைகளை தொடங்கவுள்ளது.
65,000க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் தடுப்பூசியை பரிசோதிக்க முன்வந்ததாகவும், முதல் கட்ட மனித சோதனைகளில் பங்கேற்க 56பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை 45 முதல் 60 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் தொற்றுநோயைக் கையாள்வது குறித்து சுகாதார அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். எனினும் அமெரிக்கத் தடைகள் காரணமாக போதுமான அளவு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் நாடு தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.