கோட்டாவின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு 35 இலட்சம் செலவு – ஐ.தே.க
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அரசாங்கம் நாளொன்றுக்கு 35 இலட்சத்தை செலவிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
சிறிதொத்தாவில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் நளின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் கொலை முயற்சி தொடர்பில் வெளிப்படையாகவும், ஆழமாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனை நாம் இலகுவான விடயமாக கருதவில்லை. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவின் பாதுகாப்புக்காக 42 விசேட அதிரடி படையினரும், 28 இராணுவத்தினரும், மொத்தமாக 70 மெய்ப்பாதுகாவலர்கள் அவருக்கு பாதுகாப்பை வழங்குகின்றனர்.
அதேபோல் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இது போதுமா இல்லையா என்பது தெரியாது. இதற்காக அரசாங்கம் நாளோன்றுக்கு 35 இலட்சத்தை செலவிடுகின்றது.
அதேபோல் முன்னாள் இராணுவ தளபதியும், தற்போதைய அமைச்சரவை அமைச்சருமான சரத்பொன்சேகாவுக்கு 20 மெய்ப்பாதுகாவலர்களே வழங்கப்பட்டுள்ளனர். ஆகவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள விடயத்தில் அரசாங்கத்தை குற்றம் சுமத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.