சகோதரரின் சிகிச்சைக்காக தனி விமானம்: தமிழக அரசு மூலம் 14.91 இலட்சத்தை செலுத்தினார் துணை முதல்வர்!
In இந்தியா October 20, 2018 1:26 pm GMT 0 Comments 1466 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரை இராணுவ விமானம் மூலம் மதுரையிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்ததற்காக 15 இலட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்த பின்பே மத்திய அரசு கட்டணம் கேட்டுள்ள தகவலும் அம்பலமாகியுள்ளது.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் கடந்த ஜூலை மாதம் மதுரையிலிருந்து சென்னைக்கு இராணுவ விமானம் மூலம் அழைத்து வரப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு நன்றி தெரிவிக்க ஜூலை 24 டெல்லி சென்ற பன்னீர்செல்வத்தை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்து திருப்பியனுப்பிய நிலையில், ஜூலை 26 ஆம் திகதி இராணுவ விமானத்தை பயன்படுத்தியதற்கு கட்டணமாக 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை பன்னீர் செல்வத்திடம் கேட்கப்பட்டுள்ளது.
இராணுவ விமானத்திற்கு தமிழக அரசின் மூலமே கோரிக்கை விடுக்கப்பட்டதால் தமிழக அரசு கஜானாவில் இருந்து கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி, 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் மூலம் கட்டணம் செலுத்தியுள்ளார். இராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டு 25 நாட்கள் சென்ற பின்னர் மத்திய அரசு கட்டணம் கேட்டதால் நிர்மலா சீதாராமன், பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்ததே இதற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.