சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவும் – சுகாதார அமைச்சுக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கடிதம்
In இலங்கை February 21, 2021 8:23 am GMT 0 Comments 1236 by : Dhackshala
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் ஆகிய இரண்டுக்கும் அனுமதி வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவிற்கு சர்வதேச மன்னிப்புச்சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
அந்த கடிதத்தில், “இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி குறித்து நீங்கள் கவனம் செலுத்தவேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவர்களின் உடல்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யவேண்டும் என அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொள்கை எமக்குப் பெரிதும் விசனமளிக்கிறது.
ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களில் சடலங்களை அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் ஆகிய இரண்டுக்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
அதுமாத்திரமன்றி உலக சுகாதார ஸ்தாபனமும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவும் அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் அனுமதியளித்துள்ளது.
இஸ்லாமிய மதநம்பிக்கைகளின் பிரகாரம், ஒருவர் உயிரிழந்த பின்னர் அவருக்கு வழங்கப்படும் இறுதி மரியாதையே அடக்கம் செய்வதாகும்.
எனினும் முஸ்லிம்களின் மதநம்பிக்கைக்கு முரணான வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டாயத்தகனம் என்ற கொள்கைக்கு இதுவரையில் அரசாங்கம் நியாயமான காரணங்கள் எதனையும் முன்வைக்கவில்லை.
தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதன் விளைவாக நிலத்தடி நீரின் ஊடாக வைரஸ் தொற்று பரவலாம் என்று தொற்றுநோய் வைத்திய நிபுணர் சுகத் சமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் நீரினூடாக கொரோனா வைரஸ் பரவாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் அனுமதியளிக்கும் அதேவேளை, இதுவிடயத்தில் தற்போது பின்பற்றப்படும் அடக்குமுறைக் கொள்கையை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.