சட்டமா அதிபரின் பதில் சாதகமாக அமையும் – சுகாஸ் நம்பிக்கை
In இலங்கை May 8, 2019 10:33 am GMT 0 Comments 1499 by : Dhackshala
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபர் சாதகமான பதிலை வழங்குவாரென சட்டத்தரணி க.சுகாஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு அவ்வாறு சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் உயர் நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பான வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த வழக்கு தொடர்பான விடயங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது என நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார்.
இந்நிலையில், யாழ். பல்கலைகழக மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளுள் ஒருவரான சுகாஸ், மாணவர்களின் பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தங்களது பிணை விண்ணப்பம் தற்காலிகமாக மறுதலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் சட்டமா அதிபரின் சாதகமான அறிக்கை கிடைக்கபெறும் என நம்பிக்கை வெளியிட்டார்.
அவ்வாறு கிடைக்கபெறாதுவிடின் உயர் நீதிமன்றத்திற்கு செல்லவும் தயங்க மாட்டேன் என்றும் மாணவர்களுக்கான நீதி போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றும் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.