சபரிமலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : புதிய வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு!
In இந்தியா December 16, 2020 8:43 am GMT 0 Comments 1479 by : Krushnamoorthy Dushanthini

சபரிமலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கேரள சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி மண்டல பூஜைக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கேரள சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் சபரிமலை கோயில் திறக்கப்பட்டது.
அதன் பின்னா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் 51 போ் கோயில் பணியாளா்கள் 245 போ் உள்பட 299 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. கோயிலை திறந்தபின் இரு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு கொரோனா பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி வரும் டிசம்பர் 26 ஆம் திகதி மண்டல பூஜைக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் கட்டாயம் கொரேனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ஏற்கெனவே கரோனா பரிசோதனை மேற்கொண்டிருந்தாலும் அவா்கள் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பக்தா்கள் அனைவரும் தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்கவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.