சபரிமலை தீர்ப்பு வரவேற்கத்தக்கது: கமல்ஹாசன்

கடவுள் முன்னிலையில் அனைவரும் சமமானவர்கள் என்று கூறப்படும் நிலையில், ஐயப்பன் சபரிமலை ஆலயத்திற்கு அனைவரும் செல்லலாம் என விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற்பதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் மிக்க குறித்த தீர்ப்பு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
“நான் இதுவரை கோயிலுக்குச் சென்றதில்லை. ஆனால் கடவுள் முன்னிலையில் அனைவரும் சமம் என்றபோது கோயிலுக்கும் அனைவரும் செல்லாம். ஆகவே உச்சநீதிமன்றம் விதித்துள்ள இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு 12 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணையானது, கடந்த 12 வருடங்களாக ஐந்து பேர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், பெண்கள் மீதான பாகுபாடு நீண்டகாலமாக இருந்துவருகிறது. ஆனால் கடவுள் முன் ஆண், பெண் வேறுபாடு இல்லை. எனவே சபரிமலை ஆலயத்திற்குள் அனைவரும் செல்லலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை பெரும்பாலானோர் வரவேற்றுள்ள நிலையில், ஆலய நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது சட்டவிரோதமான தீர்ப்பு என்றும், இதை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தான் நாத்திகனாக இருந்தாலும் இத்தீர்ப்பு சிறந்ததென்ற ரீதியில் அதை வரவேற்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.