சம்பள அதிகரிப்பினை கோரி இன்றும் ஆர்ப்பாட்டம்!
அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரும் தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க கோரி, மலையத்தில் பல இடங்களில் இன்றும்(செவ்வாய்கிழமை) கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், பத்தனை திம்புள்ள தோட்டத்தில் 300 இற்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு வேண்டும் என கோரி தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியின், திம்புள்ள சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள், சுலோகங்களையும், கறுப்பு கொடிகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பினைப் பெற்றுத் தருவதாக கூறிய தொழிற்சங்க சம்மேளத்தினர், முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி, அதனைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
மக்களுக்கு நன்மை செய்வதாக வாக்குறுதிளித்த இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், ஏமாற்றப்படுவதாகவும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.