சம்பியன்ஸ் லீக்: அட்லெடிகோ மெட்ரிட் – போருசியா டோர்ட்மண்ட் அணிகள் தீவிர பயிற்சி
In உதைப்பந்தாட்டம் November 6, 2018 4:34 am GMT 0 Comments 1388 by : Anojkiyan
ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இதில் 11 முறை சம்பியன் அணியான ரியல் மெட்ரிட் அணி, ஐந்து முறை சம்பியனான பார்சிலோனா அணி, அட்லெடிகோ மெட்ரிட் அணி, ஜூவெண்டஸ், மென்செஸ்டர் யுனைடெட், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன், லிவர்பூல் என 32 முன்னணி அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் எட்டு குழுக்கள் பிரிக்கப்பட்டு அதில் நான்கு அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கமைய போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாளை இத்தொடரில் அட்லெடிகோ மெட்ரிட் அணியும், போருசியா டோர்ட்மண்ட் அணியும், பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி வண்டா மொட்ரோபொலிடானோ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரை பொறுத்தவரை இரண்டு அணிகளும் பலம் பொருந்திய அணிகளாகவே பார்க்கப்படுகின்றது. இதற்கமைய குழு ‘ஏ’ வில் டோர்ட்மண்ட் அணி முதலிடத்திலும், அட்லெடிகோ மெட்ரிட் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இதற்கிடையில் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அட்லெடிகோ மெட்ரிட் அணியை பொறுத்தவரை, குழு ‘ஏ’ வில், தான் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி, ஒன்றில் தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதேபோல டோர்ட்மண்ட் அணி, குழு ‘ஏ’ வில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இப்போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், 49 சதவீதம் அட்லெடிகோ மெட்ரிட் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும், 23 சதவீதம் டோர்ட்மண்ட் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும், 28 சதவீதம் போட்டி சமநிலையில் முடிவடைவதற்கான வாய்ப்பும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.