சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து தொடரிலிருந்து வெளியேற்றியது லிவர்பூல்
In உதைப்பந்தாட்டம் May 8, 2019 10:36 am GMT 0 Comments 1873 by : Anojkiyan
ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் தற்போது இத்தொடரில், அரையிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், நேற்று பலம் பொருந்திய அணிகளான பார்சிலோனா அணியும் லிவர்பூல் அணி அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது, இங்கிலாந்தில் உள்ள என்பீல்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த நிலையில், லிவர்பூல் அணி, நட்சத்திர வீரர்களான முகமது சாலா மற்றும் ரொபேர்ட்டோ ஃபேர்மினோ இல்லாமல் களமிறங்கியது.
அத்தோடு, ஏற்கனவே இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி லெக் போட்டியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆகையால் இப்போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்ய வேண்டுமென்ற கட்டாயத்தில் லிவர்பூல் அணி களமிறங்கியது.
அதனைக் கருத்திற் கொண்டு விளையாடிய லிவர்பூல் அணி, அனைத்து வீரர்களின் ஒருமித்த ஆட்டத்தால், பலம் பொருந்திய பார்சிலோனா அணியை 4-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே லிவர்பூல் அணி அதி சிறப்பாக விளையாடியது.
போட்டியின் 7ஆவது நிமிடத்தில். பார்சிலோனா பின்கள வீரர்களை ஏமாற்றி லிவர்பூல் அணியின் வீரர் டிவோக் ஒரிஜி முதல் கோலை பதிவு செய்தார்.
இதனையடுத்து, பார்சிலோனா அணி பதில் கோல் போட கடுமையாக போராடியது. எனினும் அது பலனளிக்கவில்லை. இதனால் போட்டியின் முற்பாதியில் லிவர்பூல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் பார்சிலோனா அணிக்கு லிவர்பூல் அணி கடும் சவாலாக திகழ்ந்தது.
போட்டியின் 54ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் ஜார்ஜினியோ விஜ்னால்டும் அணிக்காக இரண்டாவது கோலை அடித்து, அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப் படுத்தினார்.
இதன்பிறகு, 56ஆவது நிமிடத்தில் ஜார்ஜினியோ விஜ்னால்டும் அணிக்காக அணிக்காக இன்னொரு கோலை அடித்து 3-0 என்ற கோல்கள் கணக்கில் அணியை முன்னிலைப் படுத்தியதோடு மட்டுமல்லாமல் பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சியும் கொடுத்தார்.
தொடர்ந்து, போட்டியின் 79ஆவது நிமிடத்தில் டிவோக் ஒரிஜி அணிக்காக நான்காவது கோலை அடித்து, அணியை உச்ச நிலைக்கு கொண்டுச் சென்றார்.
இறுதிவரை போராடியும் பார்சிலோனா அணியால் ஒரு கோல் கோட போட முடியவில்லை. இதனால் போட்டியின் இறுதியில் லிவர்பூல் அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம், ஒட்டுமொத்த கோல்களின் அடிப்படையில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற லிவர்பூல் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.