சம்பியன்ஸ் லீக்: லிவர்பூல் அணியிலிருந்து இரு முக்கிய வீரர்கள் விலகல்!
In உதைப்பந்தாட்டம் May 7, 2019 4:59 am GMT 0 Comments 1728 by : Anojkiyan
ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இதில் 11 முறை சம்பியன் அணியான ரியல் மெட்ரிட் அணி, ஐந்து முறை சம்பியனான பார்சிலோனா அணி, அட்லெடிகோ மெட்ரிட் அணி, ஜூவெண்டஸ், மென்செஸ்டர் யுனைடெட், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன், லிவர்பூல் என 32 முன்னணி அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த நிலையில் தற்போது இத்தொடரில், அரையிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
இதில், இன்று பலம் பொருந்திய அணிகளான பார்சிலோனா அணியும் லிவர்பூல் அணி அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இப்போட்டியானது, இங்கிலாந்தில் உள்ள என்பீல்ட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், லிவர்பூல் அணிக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்! அணியின் நட்சத்திர வீரர்களான முகமது சாலா மற்றும் ரொபேர்ட்டோ ஃபேர்மினோ காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளனர்.
ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வந்த இவர்கள், இன்றைய போட்டியில் விளையாடமாட்டார்கள் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இப்போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் உள்ள லிவர்பூல் அணிக்கு, இவர்களின் இழப்பு கடுமையாக பாதித்துள்ளது.
ஏற்கனவே இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற அரையிறுதிக்கான முதலாவது லெக் போட்டியில், 3-0 என்ற கோல்கள் கணக்கில் பார்சிலோனா அணி அபார வெற்றிபெற்றது.
இந்த நிலையில், பார்சிலோனாவை 3 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால்தான் லிவர்பூல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் அந்த அணி இருந்தது. இதற்கு தற்போது பேரிடியாக இரு வீரர்கள் விலகியுள்ளனர்.
இப்போட்டியை பொறுத்தவரை இரு அணிகளுமே பலம் பொருந்திய அணிகளாகவே உள்ளன. இதில் பார்சிலோனா அணி இறுதியாக விளையாடிய ஐந்து போட்டிகளில், நான்கு போட்டிகளில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் பதிவு செய்துள்ளது.
இதேபோல, லிவர்பூல் அணி, இறுதியாக விளையாடிய ஐந்து போட்டிகளில், நான்கு போட்டிகளில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் பதிவு செய்துள்ளது.
இதுதவிர இரு அணிகளும் இறுதியாக 9 போட்டிகளில் நேருக்கு நேர் மோதிய போட்டிகளை கருத்திற் கொண்டால், மூன்று போட்டிகளில் பார்சிலோனா அணி வெற்றிபெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் லிவர்பூல் அணி வெற்றிபெற்றுள்ளது. மூன்று போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.
மேலும், இரு அணிகளுக்கிடையிலான போட்டிகளின் அடிப்படையில் பெற்றப்பட்ட கோல்களை எடுத்துக் கொண்டால், லிவர்பூல் அணி 6 கோல்களையும், பார்சிலோனா அணி 9 கோல்களையும் அடித்துள்ளன.
இந்த போட்டியை பொறுத்தவரை, கடந்த கால பெறுபேறுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாகவுள்ளது.
அத்தோடு, இரண்டு அணிகளிலும் பலம் பொருந்திய முன்னணி வீரர்கள் உள்ளனர்.ஆகவே இன்றைய போட்டியில் வெற்றியை மதிப்பீடுவது கடினம். எனினும், இப்போட்டி இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.