சரத் வீரசேகர மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்திய சால்ஸ் நிர்மலநாதன்
In இலங்கை December 4, 2020 4:17 am GMT 0 Comments 1689 by : Yuganthini
விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத் வீரசேகர கூறிய கருத்து பாரதூரமானது. எனவே, அவர் சபையில் மன்னிப்புக்கோர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் சரத் வீரசேகர, தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக இவ்வாறு வெளியிட்ட கருத்தினால், சபையில் கடுமைவான வாத பிரதிவாதங்கள் நடைபெற்றன.
இதன்போதே சால்ஸ் நிர்மலநாதன், சரத் வீரசேகரவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சபை அமர்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஹிட்லர் போன்று மஹிந்த செயற்பட்டிருந்தால் ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள்.
விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே இவர்களையும் ஒழித்திருக்க வேண்டும் என கூறிய கருத்து பாரதூரமானது.ஆகவே அவர் சபையில் மன்னிப்புக்கோர வேண்டும்.
அத்துடன், அரசாங்கத்தின் சில செயற்பாடுகளினாலேயே இனவாதம் வளர்ந்து வருகிறது. தமிழ் மக்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, உரிய நிரந்தர தீர்வை வழங்குங்கள்” என அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சரத் வீரசேகர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக பிரிவினைவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமையினாலேயே இவ்வாறு கூறினேன் என சபையில் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.