சர்வதேச அழுத்தங்களை திசைதிருப்பும் முயற்சியா? – தாக்குதல் குறித்து சுரேஸ் கேள்வி
In ஆசிரியர் தெரிவு April 27, 2019 1:18 pm GMT 0 Comments 2857 by : Litharsan
போர்க் குற்றங்கள் தொடர்பிலான ஜெனிவா உள்ளிட்ட சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக இலங்கை மீதான பயங்கரவாதத் தாக்குதலை அரசாங்கம் கண்டுக்கொள்ளாமல் இருந்ததா எனும் கேள்வி எழுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பினார்.
யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் நடந்த தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் தாம் இவ்வாறு பெரும் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.
ஆனால் இவ்வாறு கோரத் தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவுக்கு வளரவிட்டதற்கு யார் காரணம்? இது ஒரு தேவைக்காக வளரவிடப்பட்டதா?
ஏனேன்றால் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் பல்வேறு அழுத்தங்கள் இருக்கின்றன. எனவே சிலசமயங்களில் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக இதனை வளர விட்டார்களா?
இந்த நிலையில், முப்படையினரும், பொலிஸாரும், அரசியல் தலைவர்களும் பார்வையாளர்களாக இருந்தார்களா? இதனை நம்ப முடியவில்லை.
இதனைவிட முக்கியமாக தலைகுனிவான விடயம் தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியாது என்பதுதான்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.