சர்வதேச இராணுவக் கூட்டமைப்பு அவசியம் – அமெரிக்கா

சர்வதேச இராணுவக் கூட்டமைப்பு மிகவும் அவசியமானது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் யேமனை அண்மித்த கடற்பிராந்தியங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு சர்வதேச இராணுவக் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அமெரிக்கக் கடற்படையின் சிரேஷ்ட ஜெனரல் ஜோசப் டேன்போர்ட் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக நோக்குடன், சர்வதேச கப்பல்கள் பயணிக்கும் கடல் மார்க்கத்திலுள்ள மத்திய கிழக்கு வலயத்தின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது புதிய திட்டம் குறித்து அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், மசகு எண்ணெயுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் ஈரானுக்கு தொடர்புள்ளதாக அமெரிக்கா இதற்கு முன்னர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.
இந்நிலையில் வளைகுடா மற்றும் செங்கடல் ஆகியவற்றின் பிரதான கடல் மார்க்கமாக இருக்கின்ற ஹொமர்ஸ் மற்றும் பாப் அல் மன்டாப் ஆகிய நீரிணைகளின் பாதுகாப்ப தொடர்பாக அமெரிக்கா முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது. இதன் காரணமாகவே குறித்த கூட்டமைப்பு தொடர்பிலும் அமெரிக்க ஆர்வம் காண்பிப்பதாக கூறப்படுகின்றது.
அல் மன்டாப் நீரிணையூடாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.