சர்வதேச விசாரணையே ரெலோ இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடு – செல்வம்
In இலங்கை December 23, 2020 7:56 am GMT 0 Comments 2045 by : Dhackshala
சர்வதேச விசாரணையே ரெலோ இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடு என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “எதிர்வரும் 2021 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டு, இலங்கை அரசினால் நடத்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். எந்தவிதமான கால அவகாசத்திற்கும் இடமளிக்க முடியாது.
இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம்.
ஏற்கனவே 2019 மார்ச் மாத மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் இதன் அடிப்படையில் எமது கட்சியால் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் கூறப்பட்ட முக்கிய விடயங்களாக இலங்கை அரசை விசேட சர்வதேச விசாரணை பொறிமுறையின் முலம் விசாரணைக்குட்படுத்தல் வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் வேண்டும், இலங்கைக்கு ஒரு விசேட அறிக்கையாளர் அமர்த்தப்பட்டு இவ்விடயங்கள் சம்பந்தமான அறிக்கைகள் சமர்ப்பித்து ஆராயப் படவேண்டும், கால அவகாசம் வழங்கலாகாது என்பன உள்ளடக்கம் பெற்றுள்ளன. இந்த நிலைப்பாட்டில் இருந்து ரெலோ பின்வாங்காது.
அண்மையில் சுமந்திரனால், விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில், அது கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூறப்படுவதை நாங்கள் நிராகரிக்கிறோம்.
அந்த ஆவணம் எங்களிடம் கையளிக்கப்படவில்லை. அதன் உள்ளடக்கம் என்ன என்பதும் எங்களுக்கு தெரியாது. அப்படி இருக்கும் பொழுது அதை கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூறுவது ஏற்புடையதல்ல.
இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட பொழுது சுமந்திரன், அது சர்வதேச அமைப்புகளால் தயாரிக்கப்பட்டது, கருத்துக்களை கூறுமாறு குறித்த தலைவர்களிடம் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
எனவே இது கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பது அங்கத்துவ கட்சிகளாகிய நாங்களும் சேர்ந்து அறிவிக்கின்ற முடிவாக இருக்குமே தவிர தனிப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமைய முடியாது என்பதையும் வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.