ஜாகிர் நாயக்கிடம் விசாரணை செய்ய மலேஷிய அரசு முடிவு

மத ரீதியிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்த மத போதகர் ஜாகிர் நாயக்கிடம் விசாரணை நடத்த மலேஷிய அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோது மத போதகர் ஜாகிர் நாயக், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பல்லின மக்கள் வாழக்கூடிய மலேஷியாவில், கிளந்தான் என்ற மாநிலத்தில் உரையாற்றியபோது போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அந்த உரையாயில் அவர் கூறியுள்ளதாவது, இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம்களை விட மலேஷியாவில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு 100 மடங்கு அதிக உரிமைகள் உள்ளதாக கூறினார். இது தொடர்பான காணொளிப் பதிவு வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேஷிய அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து மலேஷிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் வெளியிட்ட அறிக்கையில், ”பொது அமைதியை பங்கம் விளைவிற்கம் வகையில், இன ரீதியாக கருத்து தெரிவித்ததற்காகவும், பொய் தகவல்களை பரப்பியதற்காகவும் ஜாகிர் நாயக் மற்றும் சிலரிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்துவார்கள். அனைத்து தரப்பினருக்கும், குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் நான் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன், சமூக நல்லிணக்கம் அமைதி ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் யார் மீதும், தனது அமைச்சகத்தின் கீழ் வரும் விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்க தயங்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என அந்த அறிக்கையூடாக கூறியள்ளார்.
மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக் பல நாடுகளிலிருந்து சட்ட விரோதமான முறையில் பணம் பெற்று சொத்துக்களை வாங்கியதாகவும், பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
இது தொடர்பாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர், இந்தியாவிற்கு வருகை தராமல் மலேஷியாவில் வசித்துள்ளார். எனினும் அவரை நாடு கடத்த மலேஷிய அரசும் மறுத்துவிட்டது.
இதேவேளை, தற்போது இந்தியா, வங்காளதேசம், ஐக்கிய நாடுகள் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இவரது சொற்பொழிவைத் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.