சாய்ந்தமருது துப்பாக்கிச்சமர் – குழந்தைகள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
In இலங்கை April 27, 2019 3:01 am GMT 0 Comments 4312 by : Dhackshala
கல்முனை- சாய்ந்தமருதில் இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் ஆறு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 தீவிரவாதிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்குரிய குழுவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தபோது துப்பாக்கி பிரயோகம் நடத்த நேரிட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
மேலும் குறித்த பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், குறித்த பகுதி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.